மேட்டுப்பாளையம் ‘தீண்டாமை’ சுவர்: ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் உறவினர்களைச் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.


சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் சிவ சுப்பிரமணியன் தலித் குடியிருப்பு தனது பார்வையில் இருக்கக்கூடாது என்பதற்காக 20 அடி உயரத்தில் தீண்டாமை சுவர் போன்று எழுப்பியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 80 அடி அகலத்தில் 20 அடி உயரத்தில் கருங்கற்களால் எழுப்பட்ட இந்த சுவர் தூண்கள் ஏதும் அமைக்கமால் கட்டப்பட்டிருந்தது.

விரிசல் விழுந்த அந்த சுவரின் அடியில் நீர் தேங்குவதாலும், தாழ்வான பகுதியில் இருக்கும் தங்களது வீட்டின்போல் எப்போது வேண்டுமானாலும் சாயும் நிலை இருக்கும் என்பதாலும் நான்கு வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டின் உரிமையாளரிடமும் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதை அதிகாரிகளும், வீட்டின் உரிமையாளரும் அலட்சியம் செய்துள்ளனர்.


விளைவாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17 பேரும் உடல் நசுங்கி, மண் மூடி உயிரிழந்தனர். இந்நிலையில் சிவ சுப்பிரமணியனை கைது செய்ய வலியுறுத்தியும் உறவினர்கள் அனுமதி இல்லாமல் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்ததற்கும் அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.